வரலாறு
கடந்த 29.11.2019 அன்று முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் உருவெடுத்தது. சமீப காலம் வரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியாக இருந்தததாலும், இப்பகுதியின் கலாச்சர மையமான காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காரணத்தாலும், இப்பகுதி காஞ்சிபுரம் பகுதியின் வரலாற்று கட்டங்கள் அனைத்தையும் சந்தித்துள்ளது. இப்பகுதி கி.பி.600 முதல் கி.பி.900 வரை பல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி கலை-கலாச்சார மற்றும் பொருளாதார நிலையில் உன்னத நிலையை எட்டியிருந்தது. இப்பகுதியில் பல்லவர் காலத்தில் கோயில் சிற்பக்கலை உச்ச நிலையில் காணப்பட்டது. மகாபலிபுரம் மற்றும் கிழக்குக் கடற்கரை ஒரமாக உள்ள குடைவரைக் கோயில்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.
பல்லவர் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து. கி.பி.900 முதல் கி.பி.1300 வரை, செங்கல்பட்டு பகுதி பிற்காலச் சோழர்களின் ஆட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியாக காணப்பட்டது. செங்கல்பட்டு பகுதியின் மற்றெhரு மிக முக்கியமான வரலாற்றுக் கட்டம் விஜய நகர மன்னர்கள் ஆட்சி செய்த காலமான கி.பி.1336 முதல் கி.பி.1675 வரை உள்ள காலமாகும். 1565-ம் வருடம் நடைபெற்ற தலைக்கோட்டை போரில், விஜயநகர மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டபின் செங்கல்பட்டு நகரம் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. செங்கல்பட்டு நகரத்தில் காணப்படும் கோட்டை விஜயநகர மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். இக்கோட்டையைச் சுற்றி காணப்படும் அகழி மற்றும் ஏரி இதன் போர்காலயுத்தி அடிப்படையிலான முக்கியத்துவத்தை அதிகப்படுக்கிறது.
1751-ஆம் ஆண்டு இக்கோட்டை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஆனால் 1752-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையினை மீண்டும் கைப்பற்றினார். அதன்பின்பு, இக்கோட்டை ஆங்கிலேயர்களுக்கு மிகவும் யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இது திகழ்ந்தது. ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலிக்கும் இடையேயான போர்களில் இக்கோட்டை ஹைதர் அலியின் தாக்குதல்களை தாக்குபிடித்து இப்பகுதியில் வாழும் மக்களுக்கு புகலிடமாக இருந்தது. 1900 களில் மண்பாண்டம் செய்யும் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் திகழ்ந்தது மட்டுமல்லாமல் இப்பகுதிக்கான குறிப்பாக அரிசி வியாபத்தின் சந்தை மையமாக விளங்கியது. மேலும். இம்மாவட்டம். பருத்தி. இண்டிகோ மற்றும் தோல் பதனிடுதல் ஆகிய தொழில்களின் மையமாக காணப்பட்டது. இம்மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகள் உப்பு காய்ச்சுதல் தொழிலுக்கு பெயர் பெற்றதாய் இருந்தது. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டங்களில் 1969-ம் ஆண்டுவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமையிடமாக செங்கல்பட்டு விளங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், 2945 சதுர கிலோமீட்டர் பரப்புடன் தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் சென்னை மாவட்டம், மேற்கில் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தெற்கில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 57 கிலோமீட்டர் நீள கடற்கரையை கொண்டுள்ளது. மேலும். இம்மாவட்டம் மித வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையை கொண்ட பகுதியாகும். இம்மாவட்டமானது கடற்கரை மற்றும் வெப்ப பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் பருவகால உச்ச வெப்பநிலைகளுக்கிடைய குறைந்த அளவான வீச்சு காணப்படுகிறது. ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலையாக உள்ள 25 டிகிரி செல்சியஸ் ஆண்டின் குளிர்ந்த வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 1400 மி.மீ ஆகும். இப்பகுதி வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் மற்றும் நவம்பரில் ஆண்டின் மொத்த மழையளவில் அதிகப்பங்கை பெறுகிறது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான நதிகளில் ஒன்றான பாலாறு செங்கல்பட்டு மாவட்டத்தின் வழியாக சுமார் 54 கிலோ மீட்டர் பயணிக்கிறது. மேற்கண்ட பாலாறு, பாலூர் எனும் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புகுந்து, வயலூர் மற்றும் கடலூர் கிராமங்களுக்கிடையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. மேலும் இம்மாவட்டத்தின் வடக்கில் அடையாறு ஆறும் தெற்கில் ஓங்கூர் ஆறும் பாய்கிறது. மேற்கண்ட ஆறுகள் தவிர சிறிய நதிகளான நீஞ்சல் மடுவு. புக்கத்துறை ஓடை மற்றும் கிளியாறு ஆகியவை இம்மாவட்டம் வழியாக பாய்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் (அ) 40 ஹெக்டேர் சராசரி ஆயக்கட்டு உடைய 528 பெரிய நீர்பாசன ஏரிகள் உள்ளன.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காஞ்சிபுரம் நகரம் 1 ஜூலை 1968 முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையகமாக மாறியது. பின்னர் செங்கல்பட்டு மாவட்டம், 1 ஜூலை 1997 முதல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதனால் புதிய காஞ்சிபுரம் மாவட்டம் 1 ஜூலை 1997 முதல் உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு, ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், திருப்போரூர்,செய்யூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 9 தாலுகாக்களைக் கொண்டது.